இயற்கை நியதியை - ஒரு செயலின் விளைவிலிருந்து ஒரு போதும் தப்ப முடியாது என்ற நியதியை உணர்ந்து எப்போதும் விழிப்போடு செயலாற்றப் பழகிக் கொள்ள வேண்டும். எண்ணம், சொல், செயல், மூன்றிலும் விழிப்போடு இருக்க வேண்டும்.
இதற்குத் தவமும், தற்சோதனையும் மிகவும் உதவிகளாகும். இவற்றால் அறிவு கூர்மையடைந்து கிரகிக்கும் சக்தி (Receptivity) அதிகப்படும். பிறரோடு ஒத்து வாழும் நிலையும், சந்தர்ப்பச் சூழ்நிலைக்கேற்ப சகித்துப் போகும் நிலையும் (Adaptability) உண்டாகும்.
இதனால், தன்னலங்கருதாத தகைமையுணர்வு (Magnanimity) மேலோங்கும். இவற்றால் தீமை விளைவிக்கும் செயலில் ஈடுபட முடியாத நிலை, ஆக்கச் செயலில் மட்டுமே ஈடுபடக் கூடிய தெளிவு (Creativity) தானே உண்டாகி விடும்.
இவையே மன அமைதிக்கு அடிப்படைகளாகும். விரிவு, விளக்கம், விழிப்பு என்ற நிலைகளும், கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப்போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல் ஈடுபாடு ஆகியனவும் வளர்க்கப்படும் அளவுக்கு மன அமைதியும் கைகூடும்.
இவற்றை அறிவால் அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அனுபவபூர்வமாக வாழ்க்கையில் கடைப்பிடித்து பயன்காண வேண்டும். உலகெங்கும் சமாதானத்தையொட்டி விழிப்புணர்ச்சி ஏற்பட்டு உள்ளதை இன்று காண முடிகிறது.
உலகிலுள்ள அரசியல்வாதிகளும், அறிஞர்களும், யுத்தம் செய்துதான் வாழ வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்கள். இவர்கள் ஒன்றுகூடிப் பேசுவார்களேயானால், யுத்தமின்றி வாழ முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்து அதற்கான திட்டங்களையும் வகுப்பார்கள். ஆகவே, சோர்வின்றி நம்பிக்கையோடு நம் கடமையைச் செவ்வனே செய்து வருவோமாக.

