
பாதையும் பயணமும்
செப்டம்பர் 2004-ஆம் ஆண்டு, சொர்ணபுரி அவென்யூ, மகாலட்சுமி கார்டனில் ஒரு சிறிய விதையாக ஊன்றப்பட்டது நமது 15 வேலம்பாளையம் மனவளக்கலை தவ மையம்.
இறையருள், குருவருள், அருளாளர்களின் நல்வழிகாட்டுதல் மற்றும் அருள்தொண்டர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், பொதுமக்களின் பேராதரவுடன் இத்தவமையம் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி கண்டது.



பேரூராதீனம் தவத்திரு. மருதாச்சல அடிகளார் அவர்களின் முன்னிலையில், உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் அருள்நிதி S.K. மயிலானந்தன் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் அருள்நிதி. SKM. மயிலானந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, 101-வது அறிவுத்திருக்கோயிலாக மலர்ந்து மாபெரும் உருவெடுத்தது.

துவக்கத்தில் மூன்று பயிற்சிக் கூடங்கள், ஓர் அலுவலகம், ஒரு வரவேற்பறை என 5040 சதுர அடியில் இயங்கி வந்த இந்த அறிவுத்திருக்கோயில், தான் ஆற்றிய இடைவிடாத சமூகப் பணிகளின் காரணமாகவும், அதிகரித்த அன்பர்களின் வருகையாலும் ஒரு மாபெரும் அறக்கட்டளையாக (Trust) பதிவு செய்யப்பட்டு, WCSC-ன் அங்கீகாரத்துடன் உயர்வு பெற்றது.

காலப்போக்கில் அறக்கட்டளையின் சேவைகள் பல்கிப் பெருகின. அதிகரித்து வரும் சேவைகளுக்கு ஏற்பவும், எதிர்காலப் பயிற்சித் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நோக்கிலும், இக்கட்டடத்தை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விரிவுபடுத்துவதற்கான திருப்பணிப் பூஜை சிறப்புற நடைபெற்றது.

இப்பணிகளின் தொடர்ச்சியாக, முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் தலா 1110 சதுர அடியில் அதிநவீன அரங்குகள், இரண்டு குளிர்சாதன (A/C) வசதி கொண்ட அரங்குகள், யோகா பழகுபவர்களுக்கு எளிமையாக இருக்க Smart Screen (85" அகலமான தெடு திறையுடன் கூடிய திறன்மிகு இரண்டு வகுப்பறைகள்), மின்தூக்கி (Lift) எனப் பல புதிய வசதிகளுடன் மொத்தம் 7262 சதுர அடியாக அறிவுத்திருக்கோயில் பிரம்மாண்டமாக விரிவடைந்தது. இவ்வாறு சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்த நவீன அறிவுத்திருக்கோயில், உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ S.K. மயிலானந்தம் அவர்களின் பொற்கரங்களால் இனிதே திறந்து வைக்கப்பட்டது.
நெஞ்சார்ந்த நன்றிகள்

இத்தகைய பிரம்மாண்டமான விரிவாக்கப் பணிகளுக்கும், அறிவுத்திருக்கோயிலை நவீனமயமாக்கியதற்கும் வேறு எவரிடமும் நன்கொடை ஏதும் பெறாமல், முழுப் பொருட்செலவையும் இன்முகத்தோடு ஏற்று வழங்கிய அக்ஷயா டிரஸ்ட் (Akshaya Trust) குடும்ப உறுப்பினர்களுக்கு, அறிவுத்திருக்கோயில் மற்றும் திருப்பூர் 15 வேலம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பாக எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.
எங்களது இந்த ஆன்மீகப் பயணத்தில் தொடக்கம் முதலே தோள்கொடுத்துத் துணைநின்ற அத்துணை அறங்காவலர்களையும், மனவளக்கலைஞர்களையும், நல்உள்ளங்களையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
தங்களது மேலான வாழ்த்துகளோடு, இறையருளால் எங்களது இந்த அறப்பணிப் பயணம் மென்மேலும் சிறப்புடன் தொடரும்...